Um Rajyam Varunkaalai – உம் ராஜ்யம் வருங் காலை

1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.
2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே;
தம் பெலனற்ற கையை நீட்டினார்;
முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.
3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.
4. கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,
‘என்னை நினையும்’ என்று ஜெபித்தே
உம் சிலுவையை, தியானம் செய்கையில்,
உம் ராஜியத்தைக் கண்ணோக்கச் செய்யுமே.
5. ஆனால், என் பாவம் நினையாதேயும்,
உம் ரத்தத்தால் அதைக் கழுவினீர்;
உம் திரு சாவால் பாவமன்னிப்பும்
ரட்சிப்பும் எனக்காய்ச் சம்பாதித்தீர்.
6.’என்னை நினையும்’, ஆனால், உமக்கும்
என்னால் உண்டான துன்பம் கொஞ்சமோ?
சிலுவை, நோவு, ரத்த வேர்வையும்,
சகித்த நீர், இவை மறப்பீரோ?
7.’என்னை நினையும்’, நான் மரிக்கும் நாள்
‘நீயும் என்னோடு தங்குவாய் இன்றே
நற்பரதீஸில்’ என்னும் உம் வாக்கால்
என் ஆவி தேர்ந்து மீளச் செய்யுமே.

Leave a Comment